சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.
- சாலைகளின் தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சென்னை:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் திடீரென கனமழை பெய்தது.
சென்னை பாரிமுனை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ஆழ்வார் பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், அம்பத்தூர், ஆவடி, மயிலாப்பூர், மெரினா, சேப்பாக்கம், தியாகராய நகர், பட்டாபிராம், மதுரவாயல், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதேபோல் புறநகர் பகுதிகளான ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், செங்குன்றம், மூலக்கடை, மாதவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.
சாலைகளின் தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.