ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
- ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- பொதுமக்ள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் கிரீன்பீல்டு, லோயர்பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்ள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதுமட்டுமின்றி அங்குள்ள கடைகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொருட்களை வாங்க வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். மழை ஓய்ந்த பிறகு கடைகளில் புகுந்த வெள்ளநீரை வியாபாரிகள் வெளியேற்றினர்.
ஊட்டி பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலைய பாலத்தின் அடியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
இதில் அந்த வழியாக சென்ற சுற்றுலா வாகனங்கள் சிக்கிக்கொண்டன. மேலும் படகு இல்ல சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன.
ஊட்டி கமர்ஷியல் சாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. இருப்பினும் ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கனமழையை ரசித்தபடி செல்போனில் வீடியோ பதிவுசெய்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் தென்படுவதால் அங்குள்ள விவசாயிகள் நிலத்துக்கு உரமிட்டு பராமரிக்க தயாாராகி வருகின்றனர். மேலும் அங்குள்ள காய்கறி தோட்டங்களில் தற்போது விதைப்பு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஊட்டியில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறித்து நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், பாதாள சாக்கடை குழாய்கள் ஆங்காங்கே நிரம்பி வழிந்து சாலைகளில் கழிவுநீர் வெளியேறுவதால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரை பாதாள சாக்கடைக்குள் விட வேண்டாம்.
மேலும் ஓட்டல், விடுதிகளின் உரிமையாளர்கள் கட்டிடம் மற்றும் வளாகத்தில் இருந்து வரும் தண்ணீரை பாதாள சாக்கடை குழாய் இணைப்புக்குள் பொருத்தி இருக்கக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொது சுகாதார சட்டப்படி அபராதம் விதிப்பதுடன் கட்டிடத்தில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பும் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.