உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை

Published On 2024-11-15 06:31 GMT   |   Update On 2024-11-15 06:31 GMT
  • மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
  • மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இன்று அதிகாலை முதலே மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது.

களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணி முதல் மழை பெய்து வருகிறது. காலையில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது.


நாகர்கோவிலில் இன்று காலை முதலே பெய்த மழையின் காரணமாக பள்ளி செல்லச்சென்ற மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். குடை பிடித்தவாறு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.

மலையோர கிராமங்களான தச்சமலை, கோதையாறு, குற்றியாறு, மூக்கறைகல் பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. மலையோர கிராமங்களில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு இன்றும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் காலை முதலே சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. கடற்கரை பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.

அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை மற்றும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்து வருகிறது.

அதிகாலை முதலே பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் பாதிக்கப்பட்டனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மழைக் கோர்ட்டை அணிந்தவாறு அலுவலகங்களுக்கு சென்றனர்.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் மழை கொட்டியது. சிற்றாறு-1 அதிகபட்சமாக 46.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

அணைகளில் இருந்து எந்த நேரத்தில் வேண்டு மானாலும் உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால் கோதை ஆறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழைக்கு நேற்று மாவட்டம் முழுவதும் 3 வீடுகள் இடிந்து விழுந் துள்ளது. கீரிப்பாறை, தடிக்காரங்கோணம், குலசேகரம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

ரப்பர் மரங்களில் கட்டப் பட்டுள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப் பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.69 அடியாக இருந்தது. அணைக்கு 519 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 501 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.68 அடியாக உள்ளது. அணைக்கு 309 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மாம்பழத்துறையாறு, முக்கூடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

Tags:    

Similar News