வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: காமிராவில் சிக்கிய கொள்ளையன் உருவம்
- சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போனது.
- கண்காணிப்பு காமிராவில் பதிவான கொள்ளையர் உருவத்தை வைத்து விசாரணை நடந்த வருகின்றது.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி சின்னுசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 18- ந் தேதி இரவு 10 மணி அளவில் தனது மனைவி சரண்யா மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு தர்மபுரி மாவட்டம் அரூரில் நடந்த உறவினர் வீட்டு காதுகுத்து விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார்.
பின்னர் விழா முடிந்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது துணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த ரூ.50,000 பணம், அரை பவுன் மோதிரம், 1 விவோ செல்போன் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது.
யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் நோட்டமிட்டு வீடு புகுந்து செல்போன், பணம், நகைகள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணம் , செல்போன், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் அந்த பகுதியில் நடமாடும் காட்சி கேமரா வில் பதிவாகி உள்ளது. விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்தனர்.