நேரு முதல் கருணாநிதி வரை இந்திய நிலப்பரப்பை தாரை வார்த்ததுதான் சாதனை- எச்.ராஜா குற்றச்சாட்டு
- ஏழை மக்களின் நலனுக்கான திட்டங்களை கொடுத்து வருவது பா.ஜ.க அரசு.
- மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் தி.மு.க அரசு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்துகிறது.
தேனி:
தேனியில் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைவிளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
பா.ஜ.க அரசின் சாதனைகளோடு தி.மு.க அரசின் வேதனைகளையும் மக்களிடம் எடுத்துக்கூறவேண்டும். 43 கோடி மக்களுக்கு ஜன்தன்வங்கி கணக்கு, 12 கோடி கழிப்பறை, 9 கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு மத்திய பா.ஜ.க அரசால் வழங்கப்பட்டுள்ளது.
ஏழை மக்களின் நலனுக்கான திட்டங்களை கொடுத்து வருவது பா.ஜ.க அரசு. தமிழகத்தில் உட்கட்டமைப்பு திட்டங்களில் ரூ. 1 லட்சம் கோடி மத்திய அரசு முதலீடு செய்துள்ளது.
நேரு முதல் கருணாநிதி வரை இந்திய நிலப்பரப்புகளை மற்ற நாடுகளுக்கு தாரைவார்த்து கொடுத்ததை தான் சாதனையாக கூறி கொள்கின்றனர். தற்போது பிரதமர் மோடி அவற்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பிரதமரின் கட்சத்தீவை மீட்டுத்தருமாறு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் தி.மு.க அரசு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்துகிறது.
தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்களின் ஊழல் பட்டியல் டெல்லி சென்றுள்ளது. விரைவில் பலர் சிக்குவார்கள். இந்து கோவில்களில் ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. புதுப்பேட்டை கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பஞ்சாயத்து செய்தவர், இன்று திருநாவுக்கரசர் உருவாக்கிய ஆதீனத்தை மிரட்டுகிறார். இருக்கிற கோவிலை பராமரிக்க தகுதியற்ற அரசு சிதம்பரம் கோவிலை கைப்பற்ற முயற்சி எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.