தஞ்சையில், வீதி வீதியாக நடந்தே சென்று புத்தகங்கள் விற்கும் வியாபாரி
- அறிவு சார்ந்த புத்தகங்கள் விற்று மற்றவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கிறேன்.
- தினமும் காலையிலிருந்து எனது பணியை தொடங்கி வீதி வீதியாக நடந்தே சென்று புத்தகங்கள் விற்கிறேன்.
தஞ்சாவூர்:
தஞ்சை பிள்ளையார்பட்டி அருகே உள்ள பூக்கொல்லையை சேர்ந்தவர் அப்துல்முனாப் (வயது 54).
இவரது மனைவி பரக்கத். இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அப்துல்முனாப் கடந்த 35 ஆண்டுகளாக புத்தகங்கள் விற்பனை செய்து வருகிறார்.
அதாவது நடந்தே சென்று பல இடங்களில் புத்தகங்கள் விற்று வருகிறார்.
தான் சரியாக படிக்கவில்லை என்றாலும் புத்தகங்கள் விற்பனை செய்து அதனை படிப்பவர்களுக்கு அறிவு களஞ்சியத்தை மேம்படுத்தி கொள்ள தன்னால் ஓரளவு முடிகிறதே எண்ணி பெருமை கொள்கிறார்.
இது குறித்து அப்துல் முனாப் கூறும் போது:-
நான் தொடக்கப் பள்ளியை தாண்டவில்லை.
இருந்தாலும் அறிவு சார்ந்த புத்தகங்கள் விற்று மற்றவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கிறேன்.
குழந்தைகளுக்கான வாய்ப்பாடு முதல், இந்தியா, உலக மேப், சமையல் கலை புத்தகம், ஜோதிட புத்தகம், நகைச்சுவை புத்தகம், காந்தியடிகள், பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தேச தலைவர்களின் வரலாற்று புத்தகங்கள், சிந்திக்க தூண்டும் புத்தகங்கள் என பல்வேறு வகையான புத்தகங்களை விற்று வருகிறேன்.
இதற்காக வாரத்தில் ஒரு நாள் திருச்சிக்கு சென்று புத்தகங்களை மொத்தமாக கொள்முதல் செய்கிறேன்.
பின்னர் தஞ்சை நகரில் தினமும் காலையிலிருந்து எனது பணியை தொடங்கி வீதி வீதியாக நடந்தே சென்று புத்தகங்கள் விற்கிறேன்.
மேலும் சீர்காழி ,மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் பஸ், ரயில்களில் சென்று அங்கும் எனது பணியை தொடர்கிறேன்.
தினமும் ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.
இந்த வருமானத்தைக் கொண்டுதான் எனது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்தேன்.
மற்றவர்களுக்கு அறிவு களஞ்சியத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் எனது பணி இருப்பதால் மகிழ்ச்சி தான். தினமும் ஒரளவு வருமானம் வருவதால் தடையின்றி புத்தகங்கள் விற்று வருகிறேன்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்த அளவு வருமானம் கிடைத்தது.
தற்போது நிலைமை சீராகி இயல்பு நிலை திரும்பியதால் வழக்கம்போல் எனது புத்தகங்கள் விற்கும் பணி தடையின்றி தொடர்கிறது.
புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு குறைந்த விலையில் அதனை கொடுக்கிறேன் என்றார்.