உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சையில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-03-13 10:12 GMT   |   Update On 2023-03-13 10:12 GMT
  • இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
  • ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவில் அருகே இன்று ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது :-

இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

இதன் மூலம் உயிரிழப்பை தடுக்கலாம்.

மாவட்டத்தில் தற்போது ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராதம் விதிப்பது எங்களுக்கு நோக்கமல்ல.

ஹெல்மெட் , சீட் பெல்ட் அணிந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பை தடுக்கலாம். ஒரு உயிரின் மதிப்பு விலை மதிப்பற்றது.

இதற்காகத்தான் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் அவர்களுக்கு உடனுக்குடன் இரட்டிப்பு அபராதம் விதிக்க உத்தரவிட்டு உள்ளேன் .

அவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்தாலும் விதிமுறை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். பாரபட்சம் இன்றி அபராதம் விதிக்கப்படுகிறது.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் விபத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இனி அனைவரும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள். உயிரிழப்பை தடுக்க ஒத்துழைப்பு கொடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து போக்கு வரத்து காவலர்கள் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேரணியாக சென்றனர். செல்லும் வழியில் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News