தஞ்சையில், இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம்- மேயர் தலைமையில் நடந்தது
- மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கான அறிவிப்பு ஆணை இருந்தால் காண்பியுங்கள்.
- பாதாள சாக்கடை மேன்ஹாலை கண்டுபிடித்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு :-
கவுன்சிலர் சரவணன்:
சீனிவாசபுரம் ராஜாஜி ரோடு பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
கவுன்சிலர் கோபால்:
4 ராஜ வீதிகளிலும் பாதாள சாக்கடை பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பல நாட்களாகியும் பணி முடியவில்லை.
இதன் காரணமாக பலர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்தித்து வருகின்றனர். உடனடியாக இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்.
கவுன்சிலர் கண்ணுக்கினியாள்:
மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.
கவுன்சிலர் ஜெய் சதீஷ்:
மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கான அறிவிப்பு ஆணை இருந்தால் காண்பியுங்கள். மத்திய அரசு ஒருபோதும் மின் கட்டணத்தை உயர்த்துமாறு கூறவில்லை.
மாநில அரசுதான் உயர்த்தி உள்ளது.
எனது வாடுக்கு உட்பட்ட பழைய ராமேஸ்வரம் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளது.
உடனடியாக பாதாள சாக்கடை மேன்ஹாலை கண்டுபிடித்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.
இதே போல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டுக்கு உட்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.
முன்னதாக கூட்டத்தில் ஏற்கனவே 22 கவுன்சிலர்கள் கொண்டு வந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மேயர் சண் .ராமநாதன் பேசும்போது:-
மத்திய அரசு மானியம் உள்ளிட்ட நிதிகளை தர மாட்டோம் என கூறியதாலும், அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் தான் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவுதான். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் பரீசிலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.