திருப்பூர் மாவட்டத்தில் நாளை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் - 1 லட்சம்ஒரு நபருக்கு செலுத்த இலக்கு
- 63 ஆயிரத்து 172 பேருக்கு முதல் தவணையும், ஐந்து லட்சத்து 60 ஆயிரத்து 603 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.
- வெளிநாடு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (12-ந் தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 2,681 இடங்களில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில்12 - 14 வயதினர், 15-18 வயதினர், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 21 லட்சத்து, 83 ஆயிரத்து 700 பேர் உள்ளனர். இதுவரை 21 லட்சத்து 20 ஆயிரத்து 528 பேருக்கு முதல் தவணையும், 16 லட்சத்து, 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 63 ஆயிரத்து 172 பேருக்கு முதல் தவணையும், ஐந்து லட்சத்து 60 ஆயிரத்து 603 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. நாளை 12-ந் தேதி 30வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.மருத்துவ கல்லுாரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் 2,681 இடங்களில் முகாம் நடக்கிறது.
ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் ஒரு நபர் கூட விடுபடாமல் கிராமங்களிலும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் தடுப்பூசி கிடைக்க, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது.முகாமில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதம் அல்லது 39 வாரம் கடந்த சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.பல்வேறு துறைகளை சேர்ந்த 5,362 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். நல்வாய்ப்பினை இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாளை நடக்கும் முகாமில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் கடந்த வெளிநாடு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதுவரை முகாமில், 18 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று நடக்கும் முகாமில், 15 - 18 வயது பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.தடுப்பூசி முகாமில் மக்கள் பயன்பெற ஏதுவாக முகாம் நடக்கும் நேரம் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை, 7 மணி முதல், இரவு 7 மணி வரை மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.
சுகாதாரத்துறை மூலம் வாராந்திர முகாம் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மாதாந்திர மெகா முகாம்கள் நடத்தப்படுகிறது. கடந்த, 8-ந் தேதிக்கு பின் ஐந்து வாரங்களாக முகாம் நடக்காத நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை வசம் 4.40 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.