உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சியினர் மறியல்: 300-க்கும் மேற்பட்டோர் கைது

Published On 2024-09-18 07:25 GMT   |   Update On 2024-09-18 07:25 GMT
  • இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடந்தது.
  • 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

புதுச்சேரி:

புதுவையில் உயர்த்தப் பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின் துறை தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடந்தது.

இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலன், தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் போது அந்த வழியே வந்த அரசு பஸ்களை வழிமறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பஸ்களை மறித்து சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

மறியல் போராட்டத்தின் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய இந்தியா கூட்டணி கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் கடலூர், விழுப்புரம் சாலையில் பரபரப்பு நிலவியது.

இதேபோல வில்லியனூர், சேதராப்பட்டு, பாகூர் உட்பட பல்வேறு இடங்களில் இந்தியா கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News