நிதி நிறுவன அதிபர் மரணம் குறித்து உறவினர்களிடம் விசாரணை
- சகோதரி தோட்டத்தில் உடல் கருகி கிடந்தார்
- தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
சூலூர்,
சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த நல்லூர் பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லிமுத்து (வயது 53). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 9 மாதங்களாக இவர் தனது மனைவி மற்றும் மகள்களை பிரிந்து தனியாக வசித்தார்.
நேற்று காலை செல்லிமுத்து தனது சகோதரி பரமேஸ்வரியின் தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்தாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.
சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாரயாணன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்ெகாண்டனர். போலீஸ் மோப்பநாயும் அங்கு வரவழைக்கப்பட்டது. நாய் சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.
செல்லிமுத்துவின் மரணம் மர்மமாகவே உள்ளது. இதனால் மர்ம மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சுல்தான் பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்லிமுத்துவின் குடும்பத்தின் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் தான் செல்லிமுத்துவின் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு செல்லிமுத்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.
இதுதவிர பணம்- கொடுக்கல் தொழில் செய்து செல்லிமுத்துவுக்கு தொழில் போட்டியும் இருந்துள்ளது. இந்த பிரச்சினைகளால் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது போதையில் தனக்கு தானே தீவைத்துக் கொண்டாரா என்பது பற்றி தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். செல்லிமுத்துவின் உறவினர்கள், நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
மேலும் செல்லி முத்துவின் கருகிய உடல் பாகங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவிலேயே அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும். இந்த சம்பவம் சுல்தான் பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.