கழுமலையாற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்
- ஆகாய தாமரைகள் படர்ந்தும் நீரோட்டம் தடைப்பட்டு கழுமலை ஆறு தூய்மையை இழந்து வருகிறது.
- குப்பைகள் மற்றும் தண்ணீர் வேகமாக ஓடுவதற்கு தடையாக உள்ள பொருட்களை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரதான கழுமலை பாசன ஆறு உள்ளது. கொண்டல் பகுதியில் உருவாகும் கழுமலையாறு கொண்டல், வள்ளுவக் குடி, அகனி, சீர்காழி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், செம்மங்குடி உள்ளிட்ட சுமார் 15க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கரில் பாசன வசதி நடைபெறுகிறது.
சீர்காழி நகர் பகுதியில் கழுமலை பாசன ஆறு நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் மற்றும் நகர் பகுதியில் இருந்து குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உடைந்த பாட்டில்கள் ஆகியவை கொட்டப்பட்டும், ஆகாயத் தாமரைகள் படர்ந்தும் நீரோட்டம் தடைப்பட்டு கழுமலை ஆறு தூய்மையை இழந்து வருகிறது.
இதனிடையே நகர் பகுதியில் கழுமலை ஆற்றில் தேங்கி இருந்த குப்பைகள், மண்டி கிடந்த ஆகாயத் தாமரை செடிகள், மழைக்காலம் வர உள்ளதால் நகர் பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் தண்ணீர் வேகமாக ஓடுவதற்கு தடையாக உள்ள பொருட்களை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
இதனை நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன், ஆணையர் (பொ) ராஜகோபால், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், எழுததர் ராஜகணேஷ், திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.