உள்ளூர் செய்திகள்

கை அசைவு சிகிச்சைக்கு புதிய ரோபோடிக் கருவி கண்டுபிடிப்பு

Published On 2024-08-21 08:13 GMT   |   Update On 2024-08-21 08:13 GMT
  • வேலூர் சி.எம்‌.சி. சென்னை ஐஐடி இணைந்து உருவாக்கி உள்ளது.
  • 1000 நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

வேலூர்:

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் அதிக செலவு மற்றும் நேரம் ஆகியவற்றை செலவிட வேண்டி உள்ளது. மேலும் பல்வேறு முறை ஆஸ்பத்திரி சென்று கை அசைவு செய்து சிகிச்சை பெற வேண்டி உள்ளது.

இதனை தவிர்க்கும் வகையில் வேலூர் சி.எம்.சி. சென்னை ஐஐடி இணைந்து கை அசைவு சிகிச்சைக்கான புதுமையான, மலிவு விலையிலான கையடக்க ரோபோடிக் கருவியை உருவாக்கியுள்ளன.

பிளக் அண்ட் டிரெய்ன் ரோபோ அல்லது ப்ளூடோ எனும் கை நரம்பு மறுவாழ்வுக்கான இந்த கருவி ஒரு மிக்சர் கிரைண்டரின் வடிவமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு வேலூர் சிஎம்சியில் உள்ள பயோ இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிவகுமார், பாலசுப்ரமணியன், ஐ.ஐ.டி. சென்னை மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்துள்ளனர்.

மேலும், இந்த கருவியானது வேலூர் சி.எம்.சி.யில் உள்ள உடல் மருத்துவம், மறுவாழ்வு, நரம்பியல் அறிவியல் துறைகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 மாதங்களில் இது 1000 நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 100 டாக்டர்கள் இதனை பயன்படுத்தி உள்ளனர். சிறிய மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் மற்றும் வீடுகளில் இருந்தே இதனை பயன்படுத்துவதற்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்புக்கு இந்திய காப்புரிமை பெற்றுள்ள நிலையில், அமெரிக்கா, கனடா நாடுகளின் காப்புரிமைக்கு நிலுவையில் உள்ளது.

இந்த அரிய கண்டுபிடிப்பு இந்தியா மட்டுமின்றி உலகளவில் நரம்பியல் மறுவாழ்வு பராமரிப்பை கணிசமாக மேம்படுத்தும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News