புதுச்சேரிக்கு தனி கவர்னர் நியமனமா? மத்திய அரசு பரிசீலனை
- 3 ஆண்டாக புதுச்சேரி பொறுப்பு கவர்னராக இருந்த தமிழிசை இருந்தார்.
- விரைவில் புதுவைக்கு தனியாக நிரந்தர கவர்னர் நியமிக்கப்படலாம்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு கவர்னராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டார்.
தொடர்ந்து தெலுங்கானா மாநில கவர்னராக இருந்த தமிழிசை புதுச்சேரி மாநில கவர்னராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 3 ஆண்டாக புதுச்சேரி பொறுப்பு கவர்னராக இருந்த தமிழிசை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஜார்க்கண்ட், தெலுங்கானா கவர்னரான சி.பி.ராதா கிருஷ்ணன், புதுச்சேரிக்கும் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு முதல் புதுச்சேரிக்கு தனியாக நிரந்தர கவர்னர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு கவர்னர்கள் தான் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசு சில மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவிக்காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.
அதேபோல கேரளா கவர்னர் ஆரீப்முகமதுகான் பதவிக்காலமும் முடிவடைய உள்ளது. இதனால் தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கலாமா? என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதோடு புதுச்சேரிக்கும் தனியாக நிரந்தர கவர்னரை நியமிக்கலாமா? எனவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஏனெனில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக பொறுப்பு கவர்னர்கள்தான் புதுச்சேரியை நிர்வகித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு விரைவில் புதுவைக்கு தனியாக நிரந்தர கவர்னர் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.