உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி கவர்னராக கைலாசநாதன் 7-ந்தேதி பதவி ஏற்பு

Published On 2024-08-04 05:45 GMT   |   Update On 2024-08-04 05:45 GMT
  • கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.
  • 11 மணிக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை முடிக்க திட்டம்.

புதுச்சேரி:

தெலுங்கானா கவர்ன ராகவும், புதுச்சேரியில் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த தமி ழிசை சவுந்தரராஜன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால், கவர்னர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார்.

அவருக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

தற்போது அவர் மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 27-ந் தேதி புதுச்சேரியின் புதிய கவர்னராக கே.கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் 7-ந் தேதி (புதன்கிழமை) பதவியேற்கிறார். 6-ந் தேதி மாலை புதுச்சேரி வருகிறார். 7-ந் தேதி காலை 11.15 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.

இதில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ண குமார் புதிய கவர்னராக நிமியக்கப்பட்டுள்ள கைலாசநாதனுக்கு பதவி பிரமானமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைக்கிறார்.

விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர திகாரிகள் கலந்து கொண்டு கவர்னருக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை செய்து வருகிறது.

இந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதற்காக, 7-ந் தேதி காலை 11 மணிக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News