கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் வி.சி.க. நிர்வாகியிடம் விசாரணை
- விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி திராவிடமணி கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் ஆஜரானார்.
- மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நடந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது.
இதனால் அந்த பள்ளியை கலவரக்காரர்கள் உடைத்து சேதப்படுத்தி பள்ளி பஸ் மற்றும் பள்ளி கட்டிடத்திற்கு தீவைத்து எரித்தனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுபோலீசார் விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு அப்போது நியமனம் செய்து உத்தரவிட்டது. அதனையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சிமாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மாணவியின் தாய் ஸ்ரீமதி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி திரா விடமணி ஆகியோரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மாணவியின் தாய் செல்வி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோருக்கு கள்ளக்குறிச்சி காவல் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதனையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி திராவிடமணி கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது சிறப்பு புலனாய்வு குழு டிஎஸ்பி. அம்மாதுரை தலைமையிலான போலீசார் திராவிடமணியிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகதுருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.