தென்தாமரைகுளம் அருகே வேன் டிரைவர் கொலையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு
- கைதான 5 பேரை ஜெயிலில் அடைக்க நடவடிக்கை
- பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
நாகர்கோவில்:
தென் தாமரைகுளம் அருகே தேங்காய் காரன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ் என்ற சிட்டி (வயது 38 )வேன் டிரைவர். இவர் கோவையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் தேங்காய் காரன் குடியிருப்பு சானல் கரை பகுதியில் வைத்து பெலிக்சை அவரது நண்பர்கள் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து பெலிக்சின் தந்தை ரெஜி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சுபாஷ் ஜெகன் உள்பட கண்டால் தெரியும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் கொலை வழக்கு தொடர்பாக கண்ணன், சுபாஷ், ஜெகன், வினோத், ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரண மாக கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீ சாரிடம் அவர்கள் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
நானும் பெலிக்சும் நண்பர்கள். கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு கார் ஒன்று வாங்கியது தொடர்பாக ரூ.15000 பணம் கொடுக்க வேண்டும். அந்த பணத்தை பெலிக்ஸ் அடிக்கடி என்னிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான் வீட்டில் இருந்தபோது பெலிக்சும் அவரது நண்பரும் எனது வீட்டிற்கு பணம் கேட்டு வந்தனர். அப்போது எனது செல்போனை பெலிக்ஸ் எடுத்துச் சென்றார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மீண்டும் இரவு பெலிக்ஸ் அவரது நண்பருடன் வந்து என்னிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். நான் மறுநாள் மாலையில் பணம் தருவதாக கூறினேன். அப்போது என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக எனது நண்பரிடம் தெரிவித்தேன்.பின்னர் பெலிக்சை தீர்த்துக் கட்ட முடிவு செய்து அவரை போன் மூலமாக தொடர்பு கொண்டு வீட்டில் பணம் இருப்பதாக கூறி வரவழைத்தோம். அவர் அங்கு வந்தார் அப்போது அவரை வெட்டி கொலை செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த கொலை வழக்கில் மேலும் இரண்டு பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்ய டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் .கொலை நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டி உள்ளார்.