உலகம் முழுவதும் கேரவன் வாகனத்தில் சுற்றுப்பயணம் செய்யும் 35 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வந்தனர்
- இசை நீரூற்று நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்
- கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா சிறப்பு அம்சங்களை பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி:
ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 35 பேர் உலகம் முழுவதும் சாலை வழியாக கேரவன் வாகனத்தில் சென்று சுற்றுலா பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி துருக்கியில் தங்களது பயணத்தை தொடங்கினார்கள். அனைத்து வசதிகளையும் கொண்ட கேரவன் போன்ற வடிவமைப்புடைய 18 வாகனங்களில் இவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். 21 நாடுகளுக்கு சென்று அங்குஉள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட இவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
துருக்கியில் இருந்து புறப்பட்ட அவர்கள் ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்தடைந்தனர். நேற்று அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்தனர்.
கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா சிறப்பு அம்சங்களை பார்வையிட்டனர்.
பின்னர் இரவு அவர்கள் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் முருகன் குன்றம் எதிரே அமைந்துள்ள இசை நீரூற்று கண்காட்சியை பார்வையிட்டனர். முன்ன தாக கன்னியாகுமரி வந்த அவர்களை இசை நீரூற்று கண்காட்சி நிர்வாக இயக்குனர் டாக்டர் நிதின் வரவேற்றார்.இன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் அவர்கள் பின்னர் நேப்பாளம், பூட்டான், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவில் தங்களது பயணத்தை நிறைவு செய்கின்றனர்.