தெங்கம்புதூர் அருகே பெயிண்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
- சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
- சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்.
கன்னியாகுமரி:
தெங்கம்புதூர் அருகே உள்ள வடக்குஅஞ்சு குடியிருப்பு சாஸ்தான் கோயில் விளையை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனுஷ் (23), ஜெகன் (35), வினோத் (24), சுயம்புலிங்கம் என்ற லிங்கம் (30) ஆகியோர்க்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நி லையில் நேற்று முன்தினம் இரவு விஷ்ணு தனது வீட்டின் அருகில் உள்ள கோவில் மடத்து சொத்தில் வைத்து மது அருந்தி கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த தனுஷ், ஜெகன், வினோத், சுயம்புலிங்கம் என்ற லிங்கம் ஆகியோர் விஷ்ணுவை தகாத வார்த்தைகள் பேசி, கத்தியால் குத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த விஷ்ணு சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் 4 பேரும் அங்கி ருந்து தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த விஷ்ணு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அங்கிருந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விஷ்ணுவை தாக்கிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.