அகஸ்தீஸ்வரத்தில் கடையை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு
- மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
- கன்னியாகுமரி டி.எஸ்.பி., திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டார்.
கன்னியாகுமரி:
தென்தாமரைகுளம் அருகே உள்ள சந்தையடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அகஸ்தீஸ்வரம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல் செல்போன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டுபோய் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஒரு பெரிய கல்லை எடுத்து கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்று செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.
செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி டி.எஸ்.பி., திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டார். இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க அவர் உத்தரவிட்டார்.