- ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மயக்க நிலையில் இருக்கிறார்
- டாக்டர்கள் கண்காணிப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் தக்கலை அருகே மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத் (வயது 68). பேச்சாளரும் இலக்கியவாதியுமான இவருக்கு நேற்று திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று மதியம் நாஞ்சில் சம்பத்தை அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது நாஞ்சில் சம்பத் மயக்க நிலையில் காணப்பட்டார்.
இன்று காலை வரை அவருக்கு மயக்கம் தெளியவில்லை. டாக்டர்கள் அவரை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ள நாஞ்சில் சம்பத்திற்கு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சற்று குறைவாக உள்ளதாகவும் சர்க்கரை நோயின் அளவு அதிகமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் நேற்று அவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்ததைவிட உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஆனால் இன்னும் மயக்க நிலை யிலேயே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
நாஞ்சில் சம்பத் ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகி 2012-ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.அங்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்.
தினகரன் அ.ம.மு.க.வை ஆரம்பித்த நிலையில் அதில் அண்ணாவும் திராவிடமும் இல்லை என்று கூறி கட்சியில் சேரவில்லை. பின்னர் அரசியல் இருந்தே விலகு வதாக அறிவித்து விட்ட நாஞ்சில் சம்பத் சமீபகாலமாக தி.மு.க. நடத் தும் கூட்டங்களில் கலந்து கொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வந்தார்.
தற்போது இலக்கியம் சார்ந்த மேடை நிகழ்ச்சிகளில் நாஞ்சில் சம்பத் தற்போது பங்கேற்று வருகிறார்.