குலசேகரத்தில் அதிகபாரம் ஏற்றி சென்ற கனரக வாகனங்களுக்கு ரூ.2½ லட்சம் அபராதம்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கேரளாவுக்கு எம்சண்ட், என்சன்ட், ஜல்லி கல் ஆகிய கனிமவளங்களை இரவு நேரங்களில் கொண்டு செல்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட கணரக வாகனங்களில் கனிமவளங்களை வெட்டி ஆரல்வாய்மொழி, சுருளோடு, குலசேகரம், நெட்டா வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த வாகனங்கள் எல்லாம் இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் சென்றுவிடும். அதிவேகமாக அதிகலோடுடன் இந்த வாகனங்கள் செல்வதால் ரோடுகளில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் விரைவில் ரோடுகள் பழுதடைந்து விபத்துக்கள் நடைபெறுவது மட்டும் அல்லாமல் உயிர்பலியும் ஏற்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் குலசேகரத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அதிவேகமாக வந்த 6 கனரக வாகனங்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்து கொண்டு இருந்தது. அந்த வாகனங்களை மடக்கிபிடித்து சோதனை செய்தபோது அரசு நிர்ணயித்த எடையை விட அதிகளவு இருந்தது தெரியவந்தது உடனே 6 வாகனங்களுக்கு குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அதிரடியாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்தார்.