போலீசார் போட்ட பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிள் எடுத்துச்சென்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை
- ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
- வாகன சோதனையின் போது லைசென்ஸ் இல்லாமல் வருபவர்களும் சிக்கி வருகிறார்கள்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்குள் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதையடுத்து போக்குவரத்து பிரிவு போலீசார் தினமும் கலெக்டர் வளாகத்தின் முன் பகுதியில் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வாகன சோதனையின் போது லைசென்ஸ் இல்லாமல் வருபவர்களும் சிக்கி வருகிறார்கள். அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார் அவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதித்து வருகிறார்கள். போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனார். அப்போது அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளைட் அரசின் விதிமுறைக்கு உட்படாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால் அந்த மோட்டார் சைக்கிளில் முன் பகுதியில் வீல் லாக்கை மாட்டிவிட்டு சென்றனர்.
போலீசார் சென்றதும் அந்த வாலிபர் அந்த லாக்கை உடைத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்றார். போலீசார் இது தொடர்பான சி.சி.டி.வி. ஆதாரங்களுடன் வடசேரி போலீசில் புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் வெள்ளமடி பகுதியை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வடசேரி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.