தக்கலை அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி - தீயணைப்பு படையினர் மீட்டனர்
- கிணற்றின் அருகே வந்த போது திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
- தீயணைப்பு படையினர் சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு அருளை உயிருடன் மீட்டனர்
கன்னியாகுமரி :
தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி போப் நகர் பகுதியில் வசிப்பவர் அருள். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
மது குடிக்கும் பழக்கம் உடைய அருள், நேற்று வழக்கம்போல் மது அருந்தி விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள கிணற்றின் அருகே வந்த போது திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
இது குறித்து தெரியவந்ததும் பொதுமக்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் சிம்சன், தக்கலை போலீஸ் நிலையத்துக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றுக்குள் இருந்து அருளை உயிருடன் மீட்டனர். கிணற்றில் விழுந்த தொழிலாளியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரையும், தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியனையும் ஊர் மக்கள் பாராட்டினர்.