2 குழந்தைகளின் தாயாரை கரம் பிடித்த வாலிபர்
- சகோதரியின் பாசப் போராட்டம் வீணானது
- அந்தப் பெண்ணுடன் தான் வாழ்வேன் என தனது தாயாரிடம் உறுதியாக கூறினார்
நாகர்கோவில்,மே.17-
அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியிலுள்ள பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர், பின்னர் வீடு திரும்ப வில்லை.
இதையடுத்து தாயார் மகனை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மகன் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கோட்டார் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த வாலிபர் நேற்று மாலை இளம் பெண் ஒருவருடன், கோட்டார் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசாரிடம் இந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே வாலிபர் மாயமானது குறித்து புகார் உள்ளதால், போலீசார் அவரது தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வாலிபரின் தாயாரும், சகோதரியும், கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு மகனுடன் இருந்த பெண்ணைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வாலிபர், அந்தப் பெண்ணுடன் தான் வாழ்வேன் என தனது தாயாரிடம் உறுதியாக கூறினார். இதனைத் தொடர்ந்து அவரது தாயார், மகனிடம் மன்றாடினார்.
அவர்கள் இடையே சுமார் ஒரு மணி நேரமாக நீடித்த இந்த பாச போராட்டத்தில் மகன், தாயாரை உதறித் தள்ளினார். தனது முடிவில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் தாயாரும், சகோதரியும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்தை ஏற்க அவர்கள் மறுத்தனர்.
இதைத் தொடர்ந்து வாலிபரின் சகோதரி, தான் கொடுத்த நகையை திருப்பித் தருமாறு தம்பியிடம் கேட்டார். சில காலங்கள் கழித்து அதை திருப்பித் தருவதாக வாலிபர் கூறினார். இதனை சகோதரி ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் போலீசாரிடம் நகையை வாங்கித் தருமாறு கேட்டார். அதற்கு போலீசார், பிரச்சினை நடைபெற்றது அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் நகையை அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் கூறி பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்.
இதைத்தொடர்ந்து ஏமாற்றத்துடன் தாயும் மகளும் திரும்பி சென்றனர். 2 குழந்தைகளின் தாயாரை கரம் பிடித்த வாலிபர் போலீஸ் நிலையத்திலிருந்து அவரை அழைத்து சென்றார். இதனால் நேற்று இரவு போலீஸ நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.