குளச்சலில் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் சேலை கழுத்தில் இறுக்கியதால் சாவு
- மதுபழக்கம் இருந்ததால் யாரும் பெண் தர முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
- மரம் மற்றும் கழுத்தில் கட்டப்பட்ட சேலை இறுக்கியதால் ஜாண் சுதர்சன் தூக்கில் தொங்கினார்
கன்னியாகுமரி :
குளச்சல் ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் சுதர்சன் (வயது 37). இவர் கடந்த 8 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜாண் சுதர்சன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். தொடர்ந்து, தாயாரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதன்பேரில் ஜாண் சுதர்சனின் தாயார், வரன் பார்க்க தொடங்கினார். ஆனால் ஜாண் சுதர்சனுக்கு மதுபழக்கம் இருந்ததாகவும், அதனால் யாரும் பெண் தர முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வந்த ஜாண் சுதர்சன், வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கட்டை சுவரில் ஏறி அமர்ந்து உள்ளார். பின்னர் தாயாரின் சேலையை எடுத்து அருகில் நின்ற வேப்ப மரத்தில் கட்டி, தனது கழுத்திலும் மாட்டிக்கொண்டு தாயாரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் மது பாட்டிலை கீழே வீசி உடைத்து ரகளை செய்த அவரை தாயார் சமாதானப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து ஜாண் சுதர்சன் கீழே இறங்கி உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் மரம் மற்றும் கழுத்தில் கட்டப்பட்ட சேலை இறுக்கியதால் ஜாண் சுதர்சன் தூக்கில் தொங்கினார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் போலீசார் ஜாண் சுதர்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி ப்பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயாரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்தபோது தவறி விழுந்து ஜாண் சுதர்சன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.