பேச்சிப்பாறை அருகேகோதையாறு காட்டு பகுதியில் நள்ளிரவில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
- மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்த இவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
- தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு காட்டுப் பகுதியில் உள்ள கொலஞ்சிமடம் என்ற பகுதியில் வசிப்பவர் நிஷாந்த். இவருக்கு அபிஷா (வயது 19) என்ற மனைவி உள்ளார்.
இவர்கள் மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்தவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள். முதல் குழந்தை பிரசவ வலியால் அவதிபட்டு வந்தார். இவரின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இரவு 9.54 மணிக்கு பேச்சிப்பாறை ஆம்புலன்சிற்கு போன் செய்தார்கள்.
உடனடியாக பேச்சிப்பாறை 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று அபிஷாவை அழைத்து வரும் வழியில் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாடும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜீஸ் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார். அந்த பகுதியானது இருண்ட அடர்ந்த காட்டு பகுதியாகும். இரவில் மிருகங்கள் நடமாடும் பகுதி மற்றும் கரடுமுரடான பாதையாகவும் இருந்தது.
அவசர கால மருத்துவ நுட்புநர் சுஜின்ராஜ் அந்தப் பெண்மணிக்கு பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார். உடனே அந்தப் பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ சிகிச்சை அளித்து தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தப் பணியை சிறப்பாக செய்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.