உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை

Published On 2022-07-31 07:45 GMT   |   Update On 2022-07-31 07:45 GMT
  • ஆடி களப பூஜை நாளை தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது
  • பூஜைக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அதன் மடாதிபதி திருக்கயிலாய பரம்பரை 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவிலுக்கு வழங்கும் தங்க குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

பின்னர் அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்பிறகு மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க தங்க குடத்தை கோவில் மேல்சாந்திகள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் எழுந்தருளியிருக்கும் கருவறைக்குள் கொண்டு செல்கிறார்கள். அங்குதங்க குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இந்த களப அபிஷேகத்தை மாத்தூர்மட தந்தூரி சங்கர நாராயணரூ நடத்துகிறார்.

பின்னர் அம்மனுக்கு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதேபோல மறுநாளான 2-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை 12 நாட்கள் தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடக்கிறது. இந்த களப பூஜை நிறைவடைந்த பிறகு மறுநாள் 13-ந்தேதி காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News