உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்திற்கு பறவைகளின் வருகை பன்மடங்காக அதிகரித்துள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

Published On 2023-05-10 07:43 GMT   |   Update On 2023-05-10 07:43 GMT
  • கடந்த 30 ஆண்டுகளாக பாம்பே நேசுரல் ஹிஸ்டரி சொசைட்டி கண்காணித்து வருகிறது.
  • 60 வகையான வலசை வரும் பறவைகள் ஆண்டுக்கு 2 லட்சம் வந்து ஓய்வெடுப்பதற்கும் பயன்படுத்துகின்றன.

நாகர்கோவில், மே.10-

குமரி மாவட்ட வனத் துறை மற்றும் பாம்பே இயற்கை வரலாற்று கழகம் இணைந்து தயாரித்த குமரி மாவட்ட உப்பள பறவைகள் பற்றிய ஆராய்ச்சி குறிப்பு புத்தகம் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதா் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், வன அதிகாரி இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியபோது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் உப்பளங்கள் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் உள்ளன. இந்த உப்பளங்களுக்கு வரும் பறவை இனங்களின் எண்ணிக்கை, பறவைகள் வந்து தங்கிச் செல்லும் முறைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை கடந்த 30 ஆண்டுகளாக பாம்பே நேசுரல் ஹிஸ்டரி சொசைட்டி கண்காணித்து வருகிறது.

இந்தியாவின் தென்கோடி யிலுள்ள குமரி கடற்கரையில் அமைந்துள்ளதால் பூமியின் வடபாதியிலுள்ள ஆர்டிக் பகுதியிலிருந்தும், மத்திய மேற்காசிய நாடுகளிலிருந்தும் பறவைகள் பூமியின் தென்பாதியிலுள்ள வெப்ப நாடுகளுக்கு வலசை செல்லும் போது இங்கு வந்து தங்கி ஓய்வெடுக்கின்றன.

நெடுந்தூர பயணத்திற்கான சக்தியை சேமித்துவிட்டு வேணிற்காலம் தொடங்கியதும் தனது பிறப்பிடமான ஆர்டிக் பகுதிகளுக்கு திரும்பி செல்கின்றன. குமரி மாவட்ட உப்பாளங்களுக்கு இந்தியாவில் காணப்படும் அனைத்து நீர்பறவை குழுமங்களையும் சார்ந்த பறவைகள் வந்துச் செல்கின்றன. இங்கு 60 வகையான வலசை வரும் பறவைகள் ஆண்டுக்கு 2 லட்சம் வந்து ஓய்வெடுப்பதற்கும் பயன்படுத்துகின்றன.

இதில் அதிக எண்ணிக்கையில் ஆலாக்கள் (10 இனங்கள்) வருகை புரிகின்றன. அதிலும் மூன்று வகையான ஆலாக்கள் பல்லாயிர கணக்கில் வருகின்றன.

25 வருடங்களுக்கு முன்பாக சில எண்ணிக்கையில் வர தொடங்கிய பூ நாரைகள் சில ஆயிரங்களில் வந்துச் செல்கின்றன. ஆர்டிக் பகுதியிலிருந்து வலசை வரும் உள்ளான்கள் என்று அழைக்கப்படும் 28 வகையான கரையோர பறவைகளும் மற்றும் 6 வகையான வாத்து இனங்களும் இந்த உப்பளங்களுக்கு ஆண்டு தோறும் வந்துச் செல்கின்றன.

இதுபோக நாட்டு பறவைகளான கூழக்கிடா, செங்கால் நாரை, கரண்டி வாயன், அரிவாள் மூக்கன் போன்றவை கணிசமான எண்ணிக்கையில் ஆண்டு முழுவதும் தங்குகின்றன.

சாட்டிலைட் டிரான்ஸ் மீட்டர் மூலம் ஆராய்ந்ததில் இங்கே வரும் பூ நாரைகள் தென்னிந்தியா மற்றும் வட இலங்கைக்குள் தான் சுற்றித்திரிவதாக கண்டறியப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பறவைகளை ஈர்க்கும் சிறப்பு வாய்ந்த பல உப்பளங்கள் உப்பு உற்பத்தி செய்யாமல் கைவிடப்பட்டன. அதில் சில பெரிய உப்பளங்களை ஒப்பந்தக்கரர்களின் உதவியோடு அவர்களுடைய உள்கட்டமைப்புகளை பயன்படுத்தி நீர்நிலைகளை சீராக்கி பறவைகள் வந்து தங்கி உணவு உண்டு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தியதால் பறவைகளின் வருகை பன்மடங்காக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News