சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் பயணநேரம் அதிகரிப்பு
- நேர மாற்றம் ரெயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
- ‘வந்தே பாரத்’ ரெயில் இயக்கத்திற்காக பயண நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்
நாகர்கோவில் :
சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் 16127 நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது.
அந்த வகையில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 9 மணிக்கு பதிலாக 45 நிமிடங்கள் தாமதமாக 9.45 மணிக்கு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் திருச்சிக்கு பிற்பகல் 2 மணிக்கு பதில் 3 மணிக்கு வந்து சேர்ந்ததுடன் மதுரை சந்திப்புக்கு மாலை 4.25-க்கு பதிலாக 5.40 மணிக்கு வந்து சேர்ந்தது.
நாகர்கோவில் சந்திப்பு க்கு இரவு 9.20-க்கு பதிலாக 10.25 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் 10.30 மணிக்கு புறப்பட்டது. இரணியலுக்கு 9.49-க்கு பதில் 10.50-க்கு வந்து 10.51-க்கும், குழித்துறையில் 10.05-க்கு பதில் 11.07-க்கு வந்து 11.09-க்கும், இரவு 11.15 மணிக்கு திருவனந்த புரம் செல்வதற்கு பதிலாக 12.20 மணிக்கு திருவனந்த புரம் செல்லும் வகையில் கால அட்டவணை யில் மாற்றம் செய்யப்பட்டி ருந்தது.
மேலும் காலை 6.40-க்கு செல்வதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக காலை 7.40-க்கு குருவாயூர் சென்றடையும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் ரெயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரெயில் பயணிக்கும் பாதை இரட்டை ரெயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கேரளாவிலும் இரட்டை ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இருப்பினும் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக ரெயில் குருவாயூர் சென்று சேரும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குருவாயூர் செல்லும் பக்தர்களை வேதனை யடைய செய்துள்ளது. ரெயில்வே துறை நாளுக்கு நாள் ரெயில்களின் வேகத்தை அதிகரித்தும், பயண நேரத்தை குறைத்தும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதற்கு நேர்மாறாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரத்தை அதிகரிக்க செய்திருப்பதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரெயில் இயக்கத்திற்காக இவ்வாறு பயண நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.