உள்ளூர் செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க காங்கிரசார் எதிர்ப்பு

Published On 2022-07-15 09:58 GMT   |   Update On 2022-07-15 09:58 GMT
  • கருங்கலில் இன்று பரபரப்பு
  • போலீசார் சமரச பேச்சு

கன்னியாகுமரி:

கருங்கலில் இருந்து தக்கலை செல்லும் சாலை சந்திப்பில் காமராஜர் சிலை உள்ளது. இதனை காங்கிரசார் அமைத்து பராமரித்து வருகின்றனர். ஆண்டுதோறும் காமராஜர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் மற்றும் விசேச நாட்களில் காங்கிரசார் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

காமராஜரின் 120-வது பிறந்த நாளையொட்டி இன்று காலை 9 மணியளவில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய்,மற்றும் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

அதனையொட்டி சிலையை சுற்றி காங்கிரஸ் கொடிகள் கட்டப் பட்டிருந்தன. அப்போது மறுபுறம் நாம் தமிழர் கட்சியினர் கிள்ளியூர் தொகுதி செயலாளர் ஜாண் ஜெபராஜ் தலைமையில் கொடிகளுடன் திரண்டனர்.

இரண்டு கட்சியினரும் ஒரே நேரத்தில் காமராஜர் சிலைக்கு மாலையிட வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நித்திரவிளை காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் கருங்கல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, வேறு எவரும் மாலையிட முடியாத வகையில் அதனை பூட்டிவிட்டு சிலை முன் நின்று கொண்டிருந்தனர். இதனால் நாம் தமிழர் கட்சியினர் சிலைக்கு மாலைபோட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இருதரப்பினரிடமும் காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் நாம் தமிழர் கட்சியினர் சிலையை சுற்றி கொடிகள் கட்டாமல் ஒரே ஒரு கொடியுடன் வந்து மாலையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒரு கொடியுடன் வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திவிட்டு கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் கருங்கல் பகுதியில் சிறிது நேரம் பரபப்பு நிலவியது.

Tags:    

Similar News