உள்ளூர் செய்திகள்

பெரிய தீ வெட்டி ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-03-14 07:27 GMT   |   Update On 2023-03-14 07:27 GMT
இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை

கன்னியாகுமாரி, மார்ச்.14-

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.

நேற்று 9-ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, பகல் 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியர் சமுதாயம் பத்திர காளியம்மன் கோவிலிலிருந்து யானை மீது சந்தன பவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு பைங்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலிலிருந்து சந்தன குடம் மற்றும் காவடி பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15 மணிக்கு கூட்டுமங்கலம் ஊர் பக்தர்கள் சந்தனகுடம் சார்பில் பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவில் வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதலும் பெரிய சக்கர தீவட்டி வீதி உலா வருதலும் நடந்தது.

ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 7.30 மணிவரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், 7.30 மணி முதல் மாலை 9 மணிவரை பக்தி பஜனை, 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சமய மாநாடு, 2 மணிமுதல் 3.30 மணிவரை பக்தி பஜனை, 3.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வில்லிசை, 6 மணிமுதல் இரவு 10 மணி வரை சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதலும், இரவு 10 மணிமுதல் ஆன்மீக அருளிசை நிகழ்ச்சியும் நடந்தது.

இனறு நள்ளிரவு முக்கிய வழிபாடான ஒடுக்கு பவனியும், பூஜையும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த பூஜையின் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் அடங்கிய சுமார் 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்தவர்களால் தயாரிக்கப்படுகிறது. பின்னர் சன்னதி அருகே உள்ள சாஸ்தான் கோவில் பக்கம் இருந்து ஒடுக்கு பவனி வருகிறது.

பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளை துணிகளால் மூடி ஊர்லமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள். பின்னர் கோவிலை ஒரு முறை வலம் வந்து அம்மனின் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும். பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து கும்ப ளங்காய் மஞ்சள், நீர், சுண்ணாம்பு, பூ ஆகிய பொருட்களால் குருதி கொ டுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக புறைமேளம் அடிக்கப்படுகிறது. பின்னர் நடை திறக்கப்பட்டு ஒடுக்கு பூஜை நடக்கிறது. ஒடுக்கு பவனியின் போதும் பூஜை நடக்கும்போதும் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் பூரணமான அமைதி சூழலில் எந்தவித ஓசையும் இன்றி காணப்படும்.

பின்னர் கொடி இறக்கு தலும் நடக்கிறது. இவ்வாறு நடக்கும் பூஜையைக்காண கோவில் வளாகத்திலும் ஒடுக்கு பவனிவரும் வளா கத்திலும் அலை கடலென பக்தர்கள் திரண்டு நிற்பார் கள். இதற்காக மண்டைக்காட்டில் இப்போதே பக்தர்கள் குவியத்தொடங்கி உள்ளனர்.

Tags:    

Similar News