குளச்சலில் தி.மு.க. வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம்
- மாவட்ட செயலாளர் மகேஷ் பங்கேற்பு
- ஆய்வு கூட்டத்திற்கு வராதவர்களை மாற்றி கழகத்திற்கு பாடுபடுபவர்களை போட வேண்டும்
குளச்சல் :
குளச்சல் நகர தி.மு.க.வாக்குச்சாவடி பாகமுகவர் குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை குளச்சலில் நடந்தது. நகர செயலாளர் நாகூர் கான் தலைமை வகித்தார். குளச்சல் நகர் மன்ற தலைவர் நசீர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
குளச்சலில் முதலில் பாக முகவர் ஆய்வை தொடங்கி இருக்கிறோம். ஆய்வு கூட்டத்திற்கு வராதவர்களை மாற்றி கழகத்திற்கு பாடுபடுபவர்களை போட வேண்டும். இந்தியா கூட்டணியை பார்த்து ஒன்றிய அரசு பயப்படுகிறது. எதையும் செய்ய பாரதிய ஜனதா அரசு தயாராக உள்ளது. இந்தியா கூட்டணிக்கு வலு சேர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து நாட்டின் பெயரை மாற்ற துடிக்கிறார்கள். இந்தியாவை எல்லா விதத்திலேயும் வளர்ச்சியில் மாற்றி காட்டுவேன் என கூறிய பிரதமர் பெயரை மாற்றிவிட்டார். 39 எம்.பி.க்களைக் கொண்டு இந்தியாவில் 3-வது கட்சியாக தி.மு.க உள்ளது. அந்தக் கட்சிக்கு கவர்னர் பல இன்னல்களை தந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் புரிந்து கொண்டு கழக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வுக் கூட்டத்தில் குளச்சல் நகர் மன்ற துணைத் தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர்கள், மாவட்ட மீனவரணி தலைவர் ஆன்றனிராஜ், ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணைத் தலைவர் சரவணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.