உள்ளூர் செய்திகள் (District)

திங்கள்நகர் பஸ் நிலையத்தில் நுழையும் மினி பஸ்களின் ஆவணங்கள் பரிசோதனை

Published On 2023-06-14 08:25 GMT   |   Update On 2023-06-14 08:25 GMT
  • 15-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் வந்து செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
  • அரசு பஸ்கள் ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

கன்னியாகுமரி :

திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் அனுமதி பெற்ற 6 மினி பஸ்களுக்கு மட்டுமே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இங்கு 15-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் வந்து செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேபோன்று பஸ் நிலையத்திற்குள் ஏற்றிய பயணிகளை வெகுநேரமாக காக்கவைப்பதும், பயணிகளுடன் பஸ் நிலையம் வெளியில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதும் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்தும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் மினி பஸ்களை ஒழுங்கு படுத்த வேண்டும். அரசு பஸ்கள் ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக் டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து போலீசார் பஸ் நிலையத்திற்குள் திடீர் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது பஸ் நிலையம் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக நின்று பயணிகளை ஏற்றிய மினி பஸ்சிற்கு அபாராதம் விதித்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட ஒரு மினி பஸ்சை ஆவணங்களை காண்பித்து எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தி குளச்சல் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். போக்குவரத்து போலீசாரின் அதிரடி சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News