வேளாண்மை துறை சார்பில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்த கண்காட்சி - கலெக்டர் அரவிந்த் தகவல்
- பல்வேறு பயிர்களில் விரும்பத்தக்க குணங்களையுடைய பாரம்பரியமிக்க பல்வேறு உள்ளுர் ரகங்களை கண்டறிந்து ரக மேம்பாட்டுக்கான ஆய்வுகளில் பயன்படுத்தினால் பகுதிகேற்ற சிறந்த ரகங்களை உருவாக்க முடியும்
- உள்ளூர் பாரம்பரிய ரகங்களை பயிரிட ஆர்வமுள்ள விவசாய பெருமக்கள் இந்த இனிய வாய்ப்பினை பயன்படுத்தி இக்கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் கலந்து கொண்டு பயனடையலாம்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண் அறிவியல் மையம் இணைந்து நடத் தும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் உயர்தர உள்ளுர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கு மற்றும் கண்காட்சியின் நோக்கமானது பல்வேறு பயிர்களில் விரும்பத்தக்க குணங்களையுடைய பாரம் பரியமிக்க பல்வேறு உள்ளுர் ரகங்களை கண்டறிந்து ரக மேம்பாட்டுக்கான ஆய்வுகளில் பயன்படுத்தினால் பகுதிகேற்ற சிறந்த ரகங்களை உருவாக்க முடியும். எனவே பல்வேறு பயிர்களில் பாரம்பரிய ரகங்களை பயிரிடும் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்துக்களை வேளாண் விஞ்ஞானிகளுக்கு எடுத்துரைக்க ஏதுவாக வேளாண்மை உழவர் நலத் துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் ஆண்டுக்கு மூன்று முறை உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளன.
இக்கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் வேளாண் துறை மற்றும் சகோதரத்துறை அலுவலர்கள், வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு பயிர்களில் பாரம்பரிய ரகங்களை பயிரிடும் உழவர் பெருமக்கள், அட்மா உழவர் நண்பர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவ கருத்துக்களை பகிர்ந்துகொள்ள உள்ளார்கள்.
இதில் வேளாண் அறிவியல் மையம் திருப்பதிசாரத்தில் பயிரிடப்பட்டுள்ள உள்ளூர் பயிர் ரகங்களும் காட்சிப்படுத்தப்படும். விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பல்வேறு பயிர்களின் உயர்தர உள்ளூர் ரகங்களின் விளை பொருட்களையும் இதர விளை பொருட்களையும் காட்சிப்படுத்திட உள்ளனர்.
எனவே உள்ளூர் பாரம் பரிய ரகங்களை பயிரிட ஆர்வமுள்ள விவசாய பெருமக்கள் இந்த இனிய வாய்ப்பினை பயன்படுத்தி இக்கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.