குளச்சல் அருகே அரசு பள்ளி ஆசிரியை தாக்குதல்
- 2 பேர் மீது பெண் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- படுகாயமடைந்த ஆசிரியை குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே பெத்தேல்புரம் குழிவிளையை சேர்ந்தவர் மரியதாஸ் (60).
இவரது மனைவி ஆன்லெட் புஷ்பம் (58). இவர் திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ஆசிரியை தினமும் வேலைக்கு செல்ல குழிவிளை பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது அதே பகுதியை சேர்ந்த சுயம்பு மற்றும் வீரமணி ஆகியோர் கிண்டல் செய்வார்களாம். இதனால் அவர்களிடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவத்தன்று மரியதாஸ் மனைவியுடன் காரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். குழிவிளையில் ஒரு கோவில் முன்பு செல்லும்போது சுயம்பு, வீரமணி அவரது காரை வழிமறித்தனர். மரியதாஸ் உடனே காரை வீட்டை நோக்கி ஓட்டினார்.
இதில் ஆத்திரமடைந்த இருவரும் காரை துரத்தி கொண்டு பின்னால் சென்றனர். வீட்டு முன் நின்ற காரிலிருந்து ஆன்லெட் புஷ்பம் இறங்கும்போது அவரை பிடித்து இழுத்து தாக்கினர். இதை தடுத்த கணவர் மரியதாசிற்கும் அடி-உதை விழுந்தது.இதில் படுகாயமடைந்த ஆசிரியை குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மரியதாஸ் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சுயம்பு, வீரமணி ஆகியோர் மீது பெண் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.