உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் இருந்து இந்திய மாணவர் சங்க வாகன பிரசார பயணம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-08-02 09:10 GMT   |   Update On 2022-08-02 09:10 GMT
  • இந்தியாவின் 4 பகுதிகளில் இருந்து வாகன பிரச்சார பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
  • தென்னிந்தியா முழுவதுக்குமான வாகன பிரச்சார பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் பஜாரில் நடந்தது.

கன்னியாகுமரி :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் சார்பில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும் தேச பாதுகாப்பு மற்றும் கல்வியை பாதுகாக்கவும் "நீட்" தேர்வு மற்றும் "கியூட்" தேர்வை ரத்து செய்ய கோரியும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக் கோரியும் இந்தியாவின் 4 பகுதிகளில் இருந்து வாகன பிரச்சார பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் தென்னிந்தியா முழுவதுக்குமான வாகன பிரச்சார பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் பஜாரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஷானு தலைமை தாங்கினார். மாநில தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். குமரி மாவட்ட செயலாளர் முபீஸ் அகமது வரவேற்று பேசினார். பிரச்சார பயணத்தை கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சின்னத்துரை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பிரசார பயணம் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்களில் செல்கிறது. இந்த வாகன பிரசார பயணம் வருகிற 18-ந் தேதி திருவனந்தபுரத்தில் முடிவடைகிறது.

மொத்தம் 5ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இந்த பிரச்சார பயணம் நடத்தப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து இந்த பிரச்சார பயணம் தொடங்கும் போது போலீசார் ரத யாத்திரை என்று நினைத்து ரத யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று கூறி அதனை தடுக்க முயன்றனர். இதனால் மாணவர் சங்க நிர்வாகிகளுக்கும் போலீசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக வாகன பிரச்சார பயணம் என்று தெரிந்ததும் போலீசார் அதற்கு அனுமதி அளித்தனர் இதைத் தொடர்ந்து அங்குஇருந்து வாகன பிரச்சார பயணம் புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News