கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணிமண்டபம் ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி தொடக்கம்
- கடல் உப்பு காற்றினால் சிதிலமடைந்த பகுதிகளில் சிமெண்ட் கலவை பூச்சு
- காமராஜர் அஸ்தி வைக்கப்பட்ட அதே இடத்தில் 2000ம் ஆண்டு காமராஜருக்கு மணி மண்டபம் திறக்கப்பட்டது.
கன்னியாகுமரி :
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 1975-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அதில் ஒரு அஸ்திகலசம் கன்னியா குமரிக்கு எடுத்து வரப்பட்டது.
அந்த அஸ்தி கலசம் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவுமண்டபம் அருகில் உள்ள மைதானத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த அஸ்தி கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கரைக்கப்பட்டது.இதனை நினைவு கூறும் வகையில் காமராஜர் அஸ்தி வைக்கப்பட்ட அதே இடத்தில் 2000ம் ஆண்டு காமராஜருக்கு மணி மண்டபம் திறக்கப்பட்டது.
காமராஜர் மணிமண்ட பத்தில் காமராஜரின் மார்பளவு வெண்கலச் சிலை அமைந்து உள்ளது. மேலும் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் அபூர்வ புகைப்பட கண்காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த மணி மண்டபம் திறக்கப்பட்டு 23 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வெள்ளி விழாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் காமராஜர் மணிமண்டபம் கடல் உப்பு காற்றினால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே சிதிலமடைந்து வெடிப்பு விழுந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து காமராஜர் மணிமண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பயனாக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபம் பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு மூலம் ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணியாக மணிமண்டபத்தின் வெளிப்புறப் பகுதியில் மூங்கில் கம்புகளினால் சாரம் அமைக்கப்பட்டு சிதில மடைந்து வெடிப்புவிழுந்து காணப்படும் பகுதிகள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.