உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கு தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி

Published On 2023-09-17 07:37 GMT   |   Update On 2023-09-17 07:37 GMT
  • இன்று காலை தொடங்கியது
  • பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

கன்னியாகுமரி, செப்.17-

உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பெருந்திரு விழா, நவராத்திரி பரிவேட்டை திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, திருக்கார்த்திகை தீபத்திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்றுபோன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற பிரபா ராமகிருஷ்ணன் சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பயனாக தற்போது பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

இதில் முதல் கட்டமாக ஸ்ரீரங்கம் சிற்பி சமீபத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து ராஜகோபுரம் கட்டுவதற்கான அஸ்திவார ஸ்ரத்தன்மையை ஆய்வு செய்து உள்ளார். இந்த நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவது குறித்த தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

கோவில் கொலு மண்டபத்தில் நடந்த இந்த தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த 5 நம்பூதிரிகள் பங்கேற்று தேவபிரசன்னம் பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதரன்நாயர், ஜோதீஸ்வரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News