கோணம் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு
- 624 மாணவர்கள் இந்த பாடப்பிரிவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்
- 1-ந்தேதி தமிழ், வரலாறு, பொருளாதாரம் தொடர்பான பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
நாகர்கோவில் :
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மதிப்பெண் பட்டியல்கள் ஆன்லைன் மூலமாக மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொண்டனர். பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கும், என்ஜினீயரிங் மற்றும் பட்டப்படிப்பிற்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
நாகர்கோவில் கோணம் அரசு கலைக்கல்லூரியில் 11 பாடப்பிரிவுகள் உள்ளது. 624 மாணவர்கள் இந்த பாடப்பிரிவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 21 பேரும் என்.சி.சி. மாணவர்கள் 77 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 16 பேரும், இந்நாள் ராணுவத்தின் வாரிசுகள் 2 பேரும் விளையாட்டு வீரர்கள் 206 பேரும், அந்தமான் நிக்கோபார் பகுதியில் வசிப்பவர்கள் ஒருவரும் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கோணம் அரசு கல்லூரியில் இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் முன்னிலையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. சிறப்பு கலந்தாய்வுக்கு 350-க்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 50 மாணவ-மாணவிகள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க வந்திருந்தனர்.
இதில் 16 மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாளை பிபிஏ, பி.காம், இங்கிலீஷ் பாடப்பிரிவிற்கும், நாளை மறுநாள் அறிவியல் தொடர்பான பாடப்பிரிவிற்கும், 1-ந்தேதி தமிழ், வரலாறு, பொருளாதாரம் தொடர்பான பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.