கன்னியாகுமரி வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம் ரூ.67 லட்சத்துக்கு ஏலம்
- பஸ் ஒன்றுக்கு தலா ரூ. 100 வீதமும் வேன் ஒன்றுக்கு தலா ரூ. 70 வீதமும் கார் ஒன்றுக்கு தலா ரூ. 50 வீதமும் இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க உரிமம் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகபட்சமாக பஸ், வேன், கார், ஜீப் மற்றும் டிரக்கர் போன்ற வாகனங்களில் சுற்றுலா வருவது வழக்கம்.
இங்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலித்து வருகிறது. பஸ் ஒன்றுக்கு தலா ரூ. 100 வீதமும் வேன் ஒன்றுக்கு தலா ரூ. 70 வீதமும் கார் ஒன்றுக்கு தலா ரூ. 50 வீதமும் இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்க ளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமையை ஆண்டுதோறும் கன்னி யாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் தனியாருக்கு ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகைக்கு விட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க உரிமம் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது. அதற்கு பதிலாக கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்களது ஊழியர்களை வைத்து சுற்றுலா வாகன ங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலித்து வந்தது.
இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாருக்கு ஏலம் விடுவதற்கான நிகழ்ச்சி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த ஏலம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலையில் நடந்தது.
இந்த ஏலம் மற்றும் டெண்டரில் மொத்தம் 6 பேர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை கன்னியாகுமரி மாதவபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ரூ.67 லட்சத்து 11 ஆயிரத்து 111க்கு ஏலம் எடுத்துள்ளார்.