கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்து பயன்பெறலாம்
- 2½ வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம்.
- குமரி மாவட்ட கலெக்டர் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் 300 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்ப்பவர்களுக்கு 70 சதவீத மானியமும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்ப்பவர்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ்2½ வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். அதிகப்பட்சமாக ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
ஓராண்டு காப்பீடு கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 1.45 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரத்துக்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான காப்பீடு கட்டணம் கால்நடை உரிமையாளர்களால் செலுத்தப்பட வேண்டும்.
ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கால்நடைகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விருப்பம் உள்ள கால்நடை வளர்ப்போர் அருகே உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.