வெள்ளமடம் நான்குவழி சாலையில் உள்ள சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதி வாலிபர் பலி
- மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்
- ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில்:
காவல்கிணற்றில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.ஒரு சில இடங்களில் மட்டும் பணிகள் நிறைவடைந்து உள்ளது.
வெள்ளமடம் பகுதியில் நான்கு வழி சாலை பகுதியில் சாலையில் சிமெண்ட் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள சிமெண்ட் தடுப்புகளை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள சிமெண்ட் தடுப்பு சுவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இது பற்றி தகவல் தெரிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இன்னும் பலியானவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.