நாகர். ரெயில்வே ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கர் கடை மூடல்
- பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்ட கடையை மூட மேயர் மகேஷ் உத்தரவு
- சில கடைகளில் வெயில் மழைக்கு என்று கடையின் முன்பு சீட்டுகள் அமைத்து மடக்கி வைத்துள்ளனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கோட் டார் சவேரியார் ஆலய சாலையில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்து ரெயில்வே ரோடு, வாகையடி தெரு பகுதிகளில் நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது ரெயில்வே ரோடு பகுதியில் கழிவுநீர் ஓடைகள் மோசமான நிலையில் இருந்தது. அதை சீரமைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். பின்னர் கோட்டார் பகுதியில் கடைகள் முன்பு சிலர் ஆக்கிரமித்து கட்டி வைத்திருந்தனர்.
அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார். ரெயில்வே ரோடு பகுதியில் ஆக்கர் கடை ஒன்று எந்த ஒரு அனுமதியும் இன்றி பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அதை உடனடியாக மூட மேயர் மகேஷ் உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து ஆணையாளர் ஆனந்த மோகன் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கர் கடையை உடனடியாக மூடினார்கள்.
மேலும் சவேரியார் ஆலயத்தில் இருந்து ரெயில்வே ரோடு பகுதிகளில் உள்ள சாலைகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.ஆனால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் போக்குவரத்துக் இடையூறாக இருந்து வருகிறது. அந்த மின்கம்பங்களை மாற்றுவது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். கோட்டார் சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கழிவு நீர் ஓடைகளும் சீரமைக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது குப்பை இல்லா நகரமாக நாகர்கோவில் மாநகராட்சி விளங்குகிறது.ஆனால் நாகர்கோவில் நகரின் பிரதான சாலைகளின் ஒன்றான ெரயில்வே ரோடு ெரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இங்குள்ள கழிவு நீர் ஓடைகள் மோசமாக சுகாதார சீர்கேடாக உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளை சீரமைப்பது தொடர்பாக அதிகாரியிடம் ஆலோசனை மேற்கொண்டோம். அப்போது இது தொடர்பாக ஏற்கனவே ெரயில்வேக்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும் மீண்டும் கடிதம் எழுத வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். உடனடியாக இந்த ரோட்டை மாநகராட்சி இடம் ஒப்படைக்க ெரயில்வே துறைக்கு கடிதம் எழுதப்படும்.நாகர்கோவில் மாநகராட்சியிடம் இந்த சாலை ஒப்படைக்கப்படும் பட்சத்தில் உடனடியாக சுகாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்று வதில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம்.
தற்பொழுது நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள ஒரு சில கடைகளில் வெயில் மழைக்கு என்று கடையின் முன்பு சீட்டுகள் அமைத்து மடக்கி வைத்துள்ளனர். தேவைப்படும் நேரங்களில் அதை உபயோகப்படுத்தி வருகிறார்கள். இது ஆக்கிரமிப்பை உண்டாக்க வழி வகுக்கும்.
எனவே அது மாதிரியான கொட்டகைகளையும் அமைக்க கூடாது .அப்படி அமைத்திருக்கும் கடைக்காரர்கள் அதை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.இல்லாவிட்டால் மாநகராட்சி மூலமாக அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.மின் கம்பங்களை மாற்று வது தொடர்பாக மின்சார வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர் தி.மு.க. மாநகரச் செயலாளர் ஆனந்த், கவுன்சிலர்கள் அனந்தலட்சுமி, சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.