நாகர். வீடுகளில் கொள்ளையடிக்க 15 நாட்களாக திட்டம் தீட்டினோம் - கைதான கொள்ளையன் பகீர் தகவல்
- துப்பாக்கி காட்டி மிரட்டி 20 பவுன் நகையை பறித்து சென்றது.
- கொள்ளையில் ஈடுபடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே இங்கு வந்து தங்கி இருந்ததாகவும் கூறினார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வேதநகர் மேல புதுத்தெருவை சேர்ந்தவர் முகமது உமர் சாகிப் (வயது 55). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்பொழுது இங்கேயே வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின் மற்றும் அவரது மகள், மாமியாருடன் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். வீட்டில் முகமது உமர் சாகிப் மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் முகமது உமர் சாகிப்பிடம் துப்பாக்கி காட்டி மிரட்டி 20 பவுன் நகையை பறித்து சென்றது.
இதுகுறித்து முகமது உமர் சாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியை சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்த கவுரி, இருளப்பபுரத்தை சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன் புகாரி, மேலசரக்கல் விளையை சேர்ந்த தர்வீஸ்மீரான் ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. தலைமறைவாகி உள்ள மற்ற 4 பேரை தேடி வந்த நிலையில் ஷேக்முகைதீன், மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம்.2 கோர்ட்டில் சரணடைந்தனர். 3 பேரையும் போலீசார் காவல் எடுத்து விசாரித்தனர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்களை கூறினார்கள். முக்கிய குற்றவாளியான சார்லசை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று சார்லஸை கைது செய்தனர். கை செய்யப்பட்ட சார்லஸிடம் விசாரணை நடத்தியபோது இந்த கொள்ளைக்கு அமீர் மூளையாக செயல்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் கொள்ளையில் ஈடுபடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே இங்கு வந்து தங்கி இருந்ததாகவும் கூறினார். சம்பவத்தன்று காலையில் நாகர்கோவில் பகுதியில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்க சென்றபோது எங்களது முயற்சி பலிக்கா ததால் மாலையில் முகமது உமர் சாகிப் வீட்டில் கை வரிசை காட்ட சென்றபோது சிக்கி கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து சார்லசை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.