உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் நாய்களை பிடிக்க அதிரடி நடவடிக்கை - மேயர் மகேஷ் உறுதி

Published On 2023-08-22 09:01 GMT   |   Update On 2023-08-22 09:01 GMT
  • நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
  • வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் தெருக்களில் விடப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நாய்களை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து மேயர் மகேஷ் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆணையாளர் ஆனந்தமோகன், நகர்நல அதிகாரி ராம்குமார் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறுகையில், நாகர்கோவில் நகரில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் அதிகளவு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளையும் நாய்கள் கடித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதிலளித்து மேயர் மகேஷ் கூறுகையில், நாய்களை துன்புறுத்தி பிடிக்க முடியாது. நாய்களை பிடிக்க ஜீவகாருண்யா டிரஸ்ட் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 52 வார்டுகளிலும் நாய்க ளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த கவுன்சிலர்கள் ஜீவகா ருண்யா டிரஸ்டை தொடர்பு கொண்டு நாய்களைப் பிடிக்க தகவல் தெரிவிக்கலாம்.

இதன் மூலமாக நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாய்களுக்கு கருத்தடை செய்தால் மட்டுமே இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். ஒரு வார்டில் ஒரு மாதத்தில் 50 நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தால் விரைவில் நாய்களை கட்டுப்படுத்திவிடலாம்.

வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் தெருக்களில் விடப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நாகர்கோவில் மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட மேல ஆசாரிபள்ளம், அய்யா கோவில் அருகில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 20-வது வார்டுக்குட்பட்ட அருந்ததியர் காலனி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம் அமைக்கும் பணி போன்ற வற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மேலும் 29-வது வார்டுக்குட்பட்ட கணேசபுரம் சர்ச் அருகில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 40-வது வார்டுக்குட்பட்ட வயல் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட்தளம் அமைக்கும் பணி, 43-வது வார்டுக்குட்பட்ட கலை நகர் பிரதான சாலையில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம் அமைக்கும் பணி மற்றும் மறவன்குடியிருப்பு மாதா மஹால் அருகில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி போன்றவற்றையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி உதவி பொறியாளார் சுஜின், இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் மோனிகா, ஆன்றோ ஸ்னைடா, விஜயன், சுகாதார ஆய்வாளர் சத்தியராஜ், ஜான், தி.மு.க செயற்குழு சதாசிவன், இளைஞரணி அகஸ்தீசன், பகுதி செயலாளர்கள் சேக்மீரான், துரை, ஜீவா, வட்ட செயலாளர்கள் விமல், பாஸ்கர், முகம்மது பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News