உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-10-31 08:06 GMT   |   Update On 2023-10-31 08:06 GMT
  • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
  • முகாமில் உள்ள மருத்துவர்களிடம் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கிட அறிவுறுத்தினார்.

நாகர்கோவில், அக்.31-

கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் இன்று மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில், உள்ளடக்கிய கல்வியின் கீழ் 2307 மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளனர். மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு வருவதற்கு, பள்ளிகளில் கற்கும் சூழல் உருவாக்கப்பட்டு, கற்கும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த பாதிப்புடைய மாற்றுத்திறன் குழந்தைகள் முறையாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தீவிர பாதிப்பினையுடைய 18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு, உள்ளடக்கிய கல்வியின் கீழ்இயங்கும் ஆயத்த பயிற்சி மையம் மூலம் சிறப்பு கல்வி மற்றும் இயன் முறைமருத்துவம் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

வீட்டு வழிக் கல்விபெறும் குழந்தைகளின் உடல்நலம், மனநலம் மற்றும் அறிவு வளர்ச்சி போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை முறையான மதிப்பீடு செய்து, அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்க மாணவர்களை தேர்வு செய்தல், அடையாள அட்டைகள் வழங்குதல், மருத்துவ உதவிகள் மற்றும் சிறப்பு தேவைகளை கண்டறிதல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பெறுதல் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் பயனாளிகளை கண்டறிந்து, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். மருத்துவ முகாமானது சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணைந்து அனைத்து வட்டார வள மையங்களிலும் நடத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வீல் சேர் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கி, சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டதோடு மாற்றுத்திறன் குழந்தைகளிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் முகாமில் உள்ள மருத்துவர்களிடம் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கிட அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட கல்வி அலுவலர் மோகன், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News