பேச்சிப்பாறை-கோதையாறு சாலையை சீரமைக்க வேண்டும்
- 19 ஆண்டுகளாக இந்த சாலை ஒருமுறை கூட சீரமைக்கப்படவில்லை.
- தினசரி பழுதாகும் பஸ்களால் அரசு போக்குவரத்து துறையின் பணமும் வீணாகி தான் வருகிறது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையானது சீறோ பாயின்ட்-கோதையாறு சாலை இந்த சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களும், 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் உள்ளன. இவர்களது பயன்பாட்டிற்காக தினசரி 7 அரசு பஸ்களும் இந்த சாலை வழியாக தான் இயக்கப்பட்டு வருகின்றன.
19 ஆண்டுகளாக இந்த சாலை ஒருமுறை கூட சீரமைக்கப்படவில்லை. எங்கு பார்த்த்தாலும் குண்டும், குழியுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. இது மிகவும் வளைவான சாலைகள் ஆகும். இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு வரும். அந்த அளவுக்கு இந்த சாலை சேதமாகி உள்ளது.
பல வருடங்களாக பழங்குடியின மக்களும், அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தாலும் சாலைகள் குளங்களை போலவே தற்போதும் காட்சி அளித்து வருகிறது.
இந்த சாலையில் ஒருமுறை சென்றால் இரு முறை பஸ் பழுதாவதும், அதனுடன் பஸ் ஓட்டும் டிரைவர்களுக்கு உடல் நல பிரச்சினைகளும் தான் வருகிறது. இதனால் பொறுமை இழந்த அரசு பஸ் டிரைவர்கள் சாலையை செப்பனிட்ட பின்பு தான் பஸ்களை இயக்குவோம் என திடீரென போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த செய்தி மாவட்ட கலெக்டருக்கு சென்ற பிறகு மாவட்ட கலெக்டரும், போக்குவரத்துதுறை அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மீண்டும் மறுநாளில் இருந்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
ஒரு நாள் இந்த சாலை வழியாக பஸ்கள் சென்றால் திரும்பி வரும்போது தினசரி பழுதாகி நடுவழியில் தான் நிற்கிறது. அதன்பிறகு டிரைவர் பணிமனைக்கு தகவல் கொடுத்து அங்கிந்து மெக்கானிக் வந்து சரி செய்த பிறகுதான் பஸ்கள் செல்ல முடியும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் படிப்பும் வீணாகி வருகிறது. அதுபோல தினசரி பழுதாகும் பஸ்களால் அரசு போக்குவரத்து துறையின் பணமும் வீணாகி தான் வருகிறது.
பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. கோதையாறுக்கு செல்லும் பகுதியில் இயற்கையான அருவி பாய்ந்து செல்கிறது. இதை கண்டு கழித்து குளிப்பதற்கு பல சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இயற்கை சூழியல் பூங்கா எனக்கூறி இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணமும் வனத்துறையினர் வசூலித்த பின்பு தான் சுற்றுலா பயணிகளையும் வன பகுதிக்குள் அனுமதிக்கின்றனர். இருந்தும் சாலைகள் சரியாக இல்லை.
சுமார் 19 வருடங்களுக்கு முன்பாக சீரமைக்கப்பட்டதும், ஆபத்தான வளைவுகளும்குளம் போன்ற குண்டும், குழியும் கொண்ட இந்த சாலை 10 வருடங்களாக எந்த சீரமைப்புகளும் இல்லாமல் இப்படியே காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் வாழும் பொதுமக்களும், தோட்ட தொழிலாளர்கள், மின்சார வாரியம் மற்றும் வனத்துறை ஊழியர்கள், அரசு பஸ் டிரைவர்களும், இந்த சாலையை தான் பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.