உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கன்னியாகுமரி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ ஊர்வலம்

Published On 2022-11-06 07:38 GMT   |   Update On 2022-11-06 07:38 GMT
  • முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, ராஜேந்திரபாலாஜி, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
  • திருவிழா கடந்த 3-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பவித்ர உற்சவ திருவிழா கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 3-ம் நாளான நேற்று காலையில் யாகசாலை பூஜை, உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதல், அபிஷேகம் போன்றவை நடைபெற்றது. பின்னர் உற்சவர்களுக்கு அணிவிப்பதற்கான பவித்ர நூல் மாலைகளை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள் கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி கோவில் மூலஸ்தானத்தின் வெளிபிரகாரத்தைச் சுற்றி திருப்பதி குடை பிடித்து படி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன் பிறகு வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோருக்கு பவித்ர மாலை அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது.

பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 2023 -ம் ஆண்டுக்கான மாத காலண்டர் மற்றும் டைரி வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., ராஜேந்திர பாலாஜி, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி, துணைத்தலைவர் பிரபாகர் ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் மோகன் ராவ், அனந்தகுமார் ரெட்டி, கார்த்திகேயன், பிரத்திவி, ராஜேந்திரகுமார், யுவராஜ்,

துணைசெயல் அலுவலர் விஜயகுமார், கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான ஆய்வாளர் சாய் கிருஷ்ணா, குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா,

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸிம், தென் தாமரை குளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் தாமரைதினேஷ், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.மாலை 6. 30 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது.

4-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதல், அபிஷேகம் ஆகியவை நடைபெறுள்ளது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்குமாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடைபெறுகிறது.

பின்னர் மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு 8.30 மணிக்கு பூர்ணா குதி மற்றும் விசேஷ பூஜையைத் தொடர்ந்து பகுமானம் அர்ச்சனை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை ஆகியவை நடைபெறுகிறது. பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வைகானசா ஆகம ஆலோசகர் ஸ்ரீ விஷ்ணு பட்டாச்சார்யலு தலைமையில் 7 அர்ச்சகர்கள் நடத்திவருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி தலைமையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News