மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் 17 இடங்களில் மறியல் போராட்டம்
- மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேட்டி
- குமரி மாவட்டத்தில் வரும் 7-ந் தேதி நடக்கிறது
நாகர்கோவில், ஆக.26-நாகர்கோவிலில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வருகிற 1-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிரச்சார பயணம் மேற்கொள்கிறது. 7-ந்தேதி அன்று மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ெரயில் நிலையங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் 3-ந்தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.
7-ந்தேதி 17 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் பிரச்சார நடைபயணம் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. காய்கறிகள், அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்காபட்டணம் துறைமுகத்தில் உரிய திட்டமிடுதல் இல்லாத காரணத்தினால் தான் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதில் மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்து சமய அறநிலை துறை கோயில்களில் அரசியல் புகுத்தப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.